எத்தனை கொரோனா இருந்தாலும் நடக்க வேண்டிய விஷயங்கள் நடந்தே தீரும்… அமெரிக்க தேர்தல் போல… இந்திய நாடாளுமன்ற கூட்டத் தொடர் போல… சட்டமன்ற கூட்டத் தொடர் போல அரசியல், அரசு நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, நீட் நுழைவுத் தேர்வு, ஆன்லைன் வகுப்புகள் போன்ற கல்வியியல் நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி, பிக் பாஸ் போல… ஐபிஎல் போல… பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களாக இருந்தாலும் சரி… எத்தனை கொரோனா இருந்தாலும் நடக்க வேண்டிய விஷயங்கள் நடந்தே தீரும்!அந்தப் பட்டியலில் நான் தனிப்பட்ட முறையில் சேர்த்துக் கொண்டது அமேசான் மின்நூல் வெளியீட்டையும்!இதோ என்னுடைய மூன்றாவது மின்நூல்… இதெல்லாம் இருக்கா... அப்ப நீங்களும் தோனிதான்! இந்த நூல் தல என்று விளையாட்டு ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியைப் பற்றியது!பள்ளிக்கூட காலத்தில் கால்பந்து வீரனாக ஆசைப்பட்டு பின்னர் கிரிக்கெட் பக்கம் மடைமாற்றப்பட்ட எம்.எஸ்.தோனி, தன் அதிரடியால் கிடுகிடுவென்று புகழ் பெறத் தொடங்கியதும் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து உலக அரங்கில் தானும் உயர்ந்து இந்திய கிரிக்கெட் அணியையும் உயர்த்தியதையும் பலமுறை விஜய் டிவி புண்ணியத்தில் எம்.எஸ்.தோனி… சொல்லப்படாத கதை என்ற பெயரில் பார்த்துச் சலித்துவிட்டோம். ஆனால், எம்.எஸ். தோனிக்கு இன்னொரு முகம் இருக்கிறது.தோனியால் ஈர்க்கப்பட்டு கிரிக்கெட்டை தங்கள் வாழ்க்கையாக வரித்துக் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல… எந்தத் துறையாக இருந்தாலும் முன்னேறி தலைமைப் பதவியை அடையத் துடிக்கும் எல்லோருக்குமே அவரிடம் பாடங்கள் இருக்கின்றன.ஏற்கனவே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்று வந்தபோது தோனி த பாஸ் (விகடன் பிரசுரம்) என்ற புத்தகத்தின் மூலம் (எம்.எஸ்.தோனியைப் பற்றி வெளிவந்த முதல் புத்தகம் அதுதான் என்பது எனக்கு தனிப்பட்ட சந்தோஷம்!)அவரை வரவேற்ற பத்திரிகையாளனான நான், 2011ல் அவர் ஒருநாள் போட்டித் தொடரின் உலகக் கோப்பையை வென்றபோது வேறு கோணத்தில் பார்த்தேன்.அவருடைய நிதானமும், வீரர்களைக் கையாளும் அணுகுமுறையும், அணித் தேர்வில் அவர் காட்டும் மாறுபட்ட சிந்தனையும், நிர்வாகத்துடன் அவர் கலந்துரையாடும் விதமும் அவருக்குள் இருக்கும் தலைவனை எனக்கு அடையாளம் காட்டின. இந்தப் பண்புகளை நாம் இருக்கும் துறையில் கடைபிடித்தால் நாமும் நம் துறையின் தோனி ஆகி விடலாமே என்று தோன்றியது. என் கருத்தைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அப்போது நடந்த ஐபிஎல் போட்டிகளும் அமைந்தன. அதிலும் பிரகாசித்தார் தோனி.அப்போது குங்குமம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்த நண்பர் தி.முருகனிடம் இந்த யோசனையைச் சொன்னபோது உடனே செயல்வடிவம் கொடுக்கச் சொன்னார். நீங்கள் தோனி ஆக ரெடியா..? என்ற தலைப்பில் சிறிய தொடர் ஒன்றை எழுதினேன்.முழுக்க தோனியின் மைதானச் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தி அதன் பின்னே ஒளிந்திருக்கும் நிர்வாகப் பண்புகளைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்த தொடர் அது. புத்தகமாக்கும் அளவுக்கு பெரிய கட்டுரைத் தொகுப்பாக இல்லாத காரணத்தால் அந்தத் தொடர் அப்படியே முடிந்து போய்விட்டது.கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஐபிஎல் போல எனக்கு நல்வாய்ப்பாக அமைந்தது அமேசான் மின் நூல்! இதோ அடுத்த இன்னிங்ஸாக அந்தச் சிறு நூலை இப்போது மின் நூலாகக் கொண்டு வந்திருக்கிறேன்.நல்ல முதலீட்டாளர் என்பவர் சரியான பந்து வரும்வரையில் காத்திருந்து அந்தப் பந்து கிடைக்கும்போது அதைச் சரியான திசையில் செலுத்தும் ராகுல் டிராவிட் போல இருக்க வேண்டும் என்று முதலீட்டை கிரிக்கெட்டோடு தொடர்பு படுத்தி எழுதியதன் மூலம் என்னை ஈர்த்த அன்பு நண்பர் செல்லமுத்து குப்புசாமி இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி!எப்போதும் போல எனக்கு உறுதுணையாக இருந்து இந்த நூலை வடிவமைத்துக் கொடுத்திருக்கும் நண்பர் லாரன்ஸ் பிரபாகருக்கு என் அன்பும் நன்றியும். இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தை வடிவமைத்துக் கொடுத்த நண்பர் செல்வாவுக்கும் நன்றி.என் முதல் வாசகர்களான மனைவி சீதாவுக்கும் மகன் தீபன், மகள் தர்சினிக்கும் என்றும் என் அன்பு. இவர்களுக்குத் தர வேண்டிய நேரத்தில்தான் இந்த எழுத்துகளைச் செய்கிறேன். அந்த நேரத்தை எனக்குத் தந்த என் குடும்பத்துக்கு என் நன்றி.நட்சத்திரங்களுடன் என் வானம், மற்றும் பலர் ஆகிய என் முந்தைய நூல்களைப் போல இந்த இதெல்லாம் இருக்கா... அப்ப நீங்களும் தோனிதான்! என்ற புத்தகத்தையும் என் D for பதிப்பகத்தின் மூலமே வெளியிடுகிறேன்.உங்கள் நல்லாதரவினைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.